தணிக்கையின் போது வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் வீடியோ பதிவு இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை
தணிக்கையின் போது வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் வீடியோ பதிவு இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் வாயிலாக கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வடக்கு மணடல காவல்துறை தலைவர் அறிவுரையின்படியும், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தலின்படியும், இனி வரும் காலங்களில் வாகன சோதனையில் ஈடுபடும்போது போக்குவரத்து பிரிவில் உள்ள இன்ஸ்பெக்டர் தலைமையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் மட்டுமே வாகன தணிக்கை செய்ய வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பிரிவில் உள்ள போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையில் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்.
அவ்வாறு வாகன தணிக்கையில் ஈடுபடும்போது வாகனங்களை நிறுத்த சொல்லி சைகை செய்தும், வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டால் அவர்களை பின்தொடர்ந்து வாகனத்தின் மூலம் துரத்தக்கூடாது. வாகன தணிக்கையின் போது லத்தி வைத்துக்கொள்ள கூடாது. மேலும் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். பாதையின் குறுக்கே சென்று வாகனங்களை நிறுத்தக்கூடாது. வாகன ஓட்டிகளிடமும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட உத்தரவுகளை மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story