அந்தேரியில் ரூ.39 கோடி போதைப்பொருள் பறிமுதல் வெளிநாட்டினர் 4 பேர் கைது
அந்தேரியில் ரூ.39 கோடி ‘கோகைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 4 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை அந்தேரி பகுதியில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் போதைப்பொருள் கடத்த உள்ளதாக அம்போலி போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் இரவு 10 மணி அளவில் அங்குள்ள மோர்யா எஸ்டேட் சாலை பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, பெரிய பார்சலுடன் வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் சந்தேகப்படும் வகையில் நடந்து சென்றதை போலீசார் கண்டனர். உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கூரியர் நிறுவனத்திற்கு பார்சல் அனுப்ப கொண்டு செல்வதாக போலீசாரிடன் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பார்சலை பிரித்து சோதனை போட்டனர்.
இதில் ஜன்னலில் தொங்கவிடப்படும் திரைச்சீலைகள் இருந்தன.
அந்த திரைச்சீலைகளை வெளியே எடுத்து பார்த்த போது, அவற்றில் பெரிய, பெரிய வளையங்கள் இருந்தன. அவை கனத்துடன் காணப்பட்டன. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே போலீசார் அதில் இருந்த ஒரு வளையத்தை உடைத்து பார்த்தனர்.
அப்போது, அதற்குள் ‘கோகைன்’ என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். திரைச்சீலைகளில் இருந்த அனைத்து வளையங்களுக்குள்ளும் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் அந்த போதைப்பொருளை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அதிரடியாக திரைச்சீலைகள் இருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டை சேர்ந்த மேலும் பெண் உள்பட 2 பேர் சிக்கினர்.
விசாரணையில், அவர்கள் பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் கார்ல பிண்டே (வயது35), நைஜீரியாவை சேர்ந்த நீரஸ் ஒகோவா (35), சைமன் (32), மைக்கேல் ஓவ் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் கார்ல பிண்டே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி 3 ஆண்டு பைகுல்லா சிறையில் இருந்தவர். கடந்த 2 மாதத்திற்கு முன்னர் தான் சிறையில் இருந்து வெளியே வந்து இருக்கிறார். பின்னர் அவர் மீண்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட திரைச்சீலை வளையங்களில் மொத்தம் 6 கிலோ 492 கிராம் எடையுள்ள கோகைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.38 கோடியே 95 லட்சம் ஆகும்.
போலீசார் கைதான வெளிநாட்டினர் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அந்த போதைப்பொருளை எந்த நாட்டுக்கு அனுப்ப இருந்தனர் என்பதை கண்டுபிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story