போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்காக போராட தயார் ஜி.கே.வாசன் பேச்சு


போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்காக போராட தயார் ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2019 11:00 PM GMT (Updated: 10 Feb 2019 7:26 PM GMT)

போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்காக போராட தயார் என ஜி.கே.வாசன் கூறினார்.

திருவையாறு, 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பனையூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வாசல் முன்பு த.மா.கா. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அவர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. கிடைக்க வேண்டிய சலுகைகளையும், திட்டங்களையும் அரசு முழுமையாக செய்யவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக என்னிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவை முதல்-அமைச்சரிடம் கொடுத்து தீர்வு காண செய்வேன்.

தேவைப்பட்டால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுடன் இணைந்து போராட தயாராக உள்ளேன். தொழில் வளர்ச்சி பெற்றால்தான் நாடு வளர்ச்சி பெறும். ஒரு இயக்கத்தின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அந்த தேர்தலில் வெற்றிபெற கூட்டணி கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவையொட்டி தொழிற்சங்க நிர்வாகிகள், ஜி.கே.வாசனுக்கு நினைவு பரிசு வழங்கினர். விழாவில் கட்சி நிர்வாகிகள் சந்திரசேகர மூப்பனார், சுதாகர் மூப்பனார், சுரேஷ்மூப்பனார், ஜிர்ஜிஸ், தொழிற்சங்க நிர்வாகிகள் சோழபுரம் கலியன், சந்திரசேகரன், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைவர் ஜி.கே.வாசன், கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வைரவன்கோவில், திருவையாறு தேரடி ஆகிய இடங்களில் கட்சி கொடியை ஏற்றினார்.

Next Story