நாசரேத் அருகே, நகை, பணம் திருட்டு போனதாக நாடகமாடிய பெண் உள்பட 3 பேர் கைது


நாசரேத் அருகே, நகை, பணம் திருட்டு போனதாக நாடகமாடிய பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2019 11:30 PM GMT (Updated: 10 Feb 2019 11:30 PM GMT)

நாசரேத் அருகே நகைகள், பணம் திருட்டு போனதாக நாடமாடிய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண் தன்னுடைய கணவருக்கு தெரியாமல் நகைகள், பணத்தை வாலிபருக்கு வழங்கியது அம்பலமானது.

நாசரேத், 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43). இவர் நாசரேத் சந்தி பஜாரில் உரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி விமலா (39). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் (37). ஆட்டோ டிரைவர். நாசரேத் அருகே முதலைமொழியைச் சேர்ந்தவர் மோசஸ் (32). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் மோசசுக்கும், விமலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே மோசஸ் தன்னுடைய உறவினரிடம் நகைகளை வாங்கி, அதனை தனியார் நகை அடகு நிறுவனத்தில் அடமானம் வைத்து இருந்தார். அந்த நகைகளை திருப்புவதற்காக, மோசஸ் விமலாவிடம் கடன் கேட்டார்.

இதையடுத்து விமலா தன்னுடைய கணவருக்கு தெரியாமல், வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தை மோசசுக்கு வழங்க முடிவு செய்தார். மேலும் கணவர் நகைகள், பணம் குறித்து கேட்டால், அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றதாக நாடகமாடவும் விமலா திட்டம் போட்டார். அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு மோசஸ், இஸ்ரவேல் ஆகிய 2 பேரும், பாஸ்கர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று, விமலாவிடம் இருந்து 8 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தை வாங்கி சென்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் பாஸ்கர் தனது வீட்டில் பீரோவில் இருந்த நகைகள், பணம் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்டார். அப்போது விமலா, வீட்டின் பின்பகுதியில் வேலை செய்தபோது, மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகள், பணத்தை திருடிச் சென்று இருக்கலாம் என்று கூறினார்.

இதுகுறித்து நாசரேத் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது விமலா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, விமலா நகைகள், பணத்தை கணவருக்கு தெரியாமல் மோசசிடம் வழங்கி விட்டு, திருட்டு போனதாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து விமலா, மோசஸ், இஸ்ரவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மோசசிடம் இருந்த 8 பவுன் நகைகள், இஸ்ரவேலிடம் இருந்த ரூ.92 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story