கிராம சபை கூட்டம் நடத்தாமலேயே பயனாளிகள் தேர்வு: விலையில்லா கறவை மாடுகள் வழங்கியதில் முறைகேடு கிராம மக்கள் புகார்


கிராம சபை கூட்டம் நடத்தாமலேயே பயனாளிகள் தேர்வு: விலையில்லா கறவை மாடுகள் வழங்கியதில் முறைகேடு கிராம மக்கள் புகார்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 10:38 PM GMT)

விலையில்லா கறவை மாடுகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருவாய் அலுவலர் வலர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கோருவது, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல் உள்பட 300–க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். பின்னர் அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

இளையான்குடியை அடுத்த திருகள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், விசவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருகள்ளி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் மின் மோட்டார் பழுது காரணமாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்பாட்டில் இல்லாததால் கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மின் மோட்டார் சரிசெய்வதுடன், கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல திருப்புவனம் அருகே வீரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் வீரனேந்தலில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் கிராம சபை கூட்டம் நடத்தாமலேயே பயனாளிகளை தேர்வு செய்து கறவை மாடுகளை வழங்கியுள்ளனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஏற்கனவே ஆடு, மாடுகள் வைத்திருப்பவர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாமல் வெளியூரில் வசிப்போர், அதிக பரப்பு நிலங்கள் வைத்திருப்பவர் ஆகியோரை பயனாளிகளாக தேர்வு செய்துள்ளனர். இதுதவிர விதவை, மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தகுதியற்ற பயனாளிகளை நீக்கி முழு தகுதியுள்ள பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Next Story