ஆய்வு செய்ய வந்த அதிகாரி மீது கிராம மக்கள் புகார்
விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டி கிராம மக்கள் தனிநபர் கழிப்பறை திட்ட ஆய்வு அதிகாரி மீது புகார் கூறியுள்ளதுடன் இலவச தனிநபர் கழிப்பறை வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்,
மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
நாங்கள் கூரைக்குண்டு பஞ்சாயத்து செவல்பட்டி கிராமத்தில் குடியிருந்து வருகிறோம். கடந்த 9–ந்தேதி காலை தனிநபர் இலவச கழிப்பறைகளை ஆய்வு செய்ய வந்த பசுமை வீடுகள் திட்ட உதவி இயக்குனர் அவரது கண்முன்பே கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நாங்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும் கேட்டார்.
நாங்களும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை தெரிவித்தோம். அதற்கு அவர் உங்களுக்கு அரசாங்கம் செலவழிக்கும் பணமெல்லாம் வீண் என்று கூறினார். மேலும் கழிப்பறை பயன்படுத்துவதற்கு பூமிபூஜை போடுவீர்களா என கேட்டார். எங்களுக்கு புரியவில்லை அவர் முன்பு நாங்கள் எப்படி கழிப்பறையை பயன்படுத்தமுடியும். மேலும் அவர் எங்கள் சமுதாயத்தை குறித்து பேசியது எங்களுக்கு மனவேதனை அளிக்கிறது.
எனவே இதுபோன்ற அதிகாரியை ஆய்வுக்கு அனுப்பவேண்டாம். அவரை பணிமாற்றம் செய்யுங்கள் நாங்கள் இனிமேல் தனிநபர் இலவச கழிப்பறையை பயன்படுத்த போவதில்லை எங்களுக்கு தனிநபர் இலவச கழிப்பறை வேண்டாம். நாங்கள் எங்கள் சொந்த செலவில் கழிப்பறை கட்டிக்கொள்கிறோம். தங்களது உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.