மத்திய அரசு துறைகளில் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களுக்கான தேர்வு


மத்திய அரசு துறைகளில் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களுக்கான தேர்வு
x
தினத்தந்தி 12 Feb 2019 12:01 PM GMT (Updated: 12 Feb 2019 12:01 PM GMT)

மத்திய அரசு துறைகளில் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்றான ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) மத்திய அரசு துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக விளங்குகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்பும் தேர்வான “ஜூனியர் என்ஜினீயர் எக்ஸாம் -2018” தேர்வு அறிவிப்பை இந்த அைமப்பு வெளியிட்டுள்ளது.

சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், குவான்டிட்டி சர்வேயிங் அண்ட் காண்டிராக்ட் பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. காலியிடங்களின் எண்ணிக்கையை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தண்ணீர் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை, தொழில்நுட்ப ஆராய்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்....

வயது வரம்பு

ஒவ்வொரு துறை என்ஜினீயரிங் பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவ விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் இந்த கட்டணத்தில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 25-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். வங்கி வழியாக கட்டணம் செலுத்த கடைசிநாள் பிப்ரவரி 27-ந் தேதியாகும். இதற்கான கணினி தேர்வு செப்டம்பர் 23 முதல் 27-ந் தேதி வரையும், இரண்டாம் தாள் தேர்வு டிசம்பர் 29-ந் தேதியும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்ள https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.. 

Next Story