பதிவு செய்து 18 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்


பதிவு செய்து 18 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 8:18 PM GMT)

பதிவு செய்து 18 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், விவசாயிகளின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஒரு மனு கொடுத்தார். அதில், மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய மின் இணைப்பு கேட்டு கடந்த 2000-ம் ஆண்டு மனு செய்து 18 ஆண்டுகளாக காத்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக மின் இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணங்களை அதிகாரிகள் தெரிவித்து, அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. இதேபோல் விவசாயிகள், மின்நுகர்வோர்கள் பலர் மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். 

Next Story