கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை முறையாக போட வேண்டும்


கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை முறையாக போட வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 5:21 PM GMT)

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முறையாக போட வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

விழுப்புரம், 

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் குமாரவேல் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதன் விவரம் வருமாறு:-

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு தோட்டக்கலை துறையினர் சரிவர வருவதில்லை. விவசாயிகளை தேசிய அளவிலான சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வதில்லை. தோட்டக்கலை பயிர்கள் சம்பந்தமான நிகழ்ச்சியை மாதத்திற்கு ஒருமுறை விவசாயிகளுக்கு நடத்த வேண்டும். அதுவும் நடத்துவதில்லை.

விழுப்புரம் நகரில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாலாமேடு மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர், சாலையில் ஆறாக ஓடியது. 10 முறையாவது தகவல் தெரிவித்த பின்னரே நகராட்சி அதிகாரிகள் வந்து சரிசெய்தனர். இதுபோன்று பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.

தற்போது கடும் வறட்சி நிலவுவதால் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கால்நடைகளுக்கு தீவனங்கள் தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை முறையாக போட வேண்டும். கால்நடை மருத்துவமனை இல்லாத கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விஷக்கடிக்கான மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதனை கேட்டறிந்த கோட்டாட்சியர் குமாரவேல், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் தாசில்தார் சையத்மெகமுத், மண்டல துணை தாசில்தார்கள் பாண்டியன், கோவர்த்தனன், வருவாய் ஆய்வாளர் வெங்கடபதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story