விவசாயி கொலை வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு


விவசாயி கொலை வழக்கு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Feb 2019 4:30 AM IST (Updated: 13 Feb 2019 11:55 PM IST)
t-max-icont-min-icon

விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த குலமங்களம் சின்னத்தெருவில் வசித்து வந்தவர் குழந்தைசாமி. விவசாயி. இவருடைய தம்பி சந்தானத்தின் மகன் சூசை மாணிக்கம். இவர், கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான தென்னைமரங்களை பொது ஏலத்தில் எடுத்து இருந்தார். அந்த தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க போவதாக அதே ஊரைச் சேர்ந்த காமராஜ் மகன் ரஞ்சித்குமார்(வயது 32) அடைக்கலமாதா கோவில் அருகே நின்று தனது நண்பர்களுடன் சொல்லிக் கொண்டு இருந்தார்.

இந்த வார்த்தை அந்த வழியாக சென்ற குழந்தைசாமி காதில் விழுந்தது. உடனே அவர், ஏலத்தில் எடுக்கப்பட்ட தென்னை மரங்களில் எப்படி தேய்காய் பறிப்பாய்? என கேள்வி எழுப்பினர். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், அருகில் கிடந்த கட்டையை எடுத்து குழந்தைசாமியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைசாமி பரிதாபமாக இறந்தார்.


இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ரஞ்சித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

Next Story