குடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது கார், நவீன கருவிகள் பறிமுதல்
குடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த ஆசிரியை வசுமதி. கடந்த மாதம் இவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் எடுக்கப்பட்டது தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வசுமதி சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று கேட்டுள்ளார். மேலும் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
இதேபோல் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம், ஞானகண்ணன் என்பவரிடம் இருந்து ரூ.11 ஆயிரம், பிரேம்குமார் என்பவரிடம் இருந்து ரூ.33 ஆயிரம், சுரேஷ்பிரபாகரன் என்பவரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் என வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை தொடர்ந்து இவர்கள் அனைவரும் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், பிரபு உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குடியாத்தம் ரெயில்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பெட்ரோல் போட்டு சென்றதும், அதனைத்தொடர்ந்து அவர்களது வங்கிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பெட்ரோல் பங்க் ஊழியர் குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த அமர்நாத் (வயது 24), சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் நகரை சேர்ந்த சதீஷ் (வயது 33), கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மங்கல்பாடி அடுத்த உப்பலாவை சேர்ந்த நிஷாத் (வயது 30) ஆகிய 3 பேரை நேற்று காலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம், 17 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு கார், 3 லேப்-டாப், 3 செல்போன்கள், ‘ஸ்கிம்மர்’ கருவிகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் நூதன முறையில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது குறித்து போலீசார் கூறியதாவது:-
நிஷாத்துக்கும் சதீசுக்கும் இடையே ‘சாட்டிங்’ மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நிஷாத் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணத்தை மோசடியாக சம்பாதிப்பது குறித்து தெரிவித்துள்ளார். மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள நண்பர்கள் மூலம் ‘ஸ்கிம்மர்’ கருவிகளை வாங்கி வந்துள்ளதாகவும், அதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவைகளில் உள்ள ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் இயக்குபவர்களிடம் கொடுத்து ஏ.டி.எம். டேட்டாவை பெற்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து நிஷாத்திடம் இருந்து ‘ஸ்கிம்மர்’ கருவிகளை சதீஷ் வாங்கி உள்ளார்.
குடியாத்தம் ரெயில்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் அமர்நாத் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சதீஷ் குடியாத்தம் வழியாக சென்றபோது பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் அமர்நாத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் கொடுக்கும் ‘ஸ்கிம்மர்’ கருவிகளை வைத்து கொள்ளுமாறும், பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பெட்ரோல் பங்க்கின் ‘ஸ்வைப்பிங்’ எந்திரத்தில் பயன்படுத்தும்போது, வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ரகசியமாக ‘ஸ்கிம்மர்’ கருவியிலும் பதிவு செய்யுமாறும், அப்படி செய்தால் விரைவில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
இதனைதொடர்ந்து சதீசிடம் இருந்து அமர்நாத் ‘ஸ்கிம்மர்’ கருவிகள், கேபிள், லேப்டாப் ஆகியவற்றை வாங்கி உள்ளார். இதன்பின்னர் அமர்நாத், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் உடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு தெரியாமல் ரகசியமாக சிறிய அளவிலான ‘ஸ்கிம்மர்’ கருவியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். தகவல்களை திருடி, அந்த தகவல்களை வாரத்திற்கு ஒருமுறை சதீசுக்கு அனுப்பி வந்துள்ளார். அதற்காக பெருந்தொகையையும் பெற்று வந்துள்ளார்.
சதீஷ் ஏ.டி.எம். கார்டு தொடர்பான தகவல்களை கேரளாவில் உள்ள நிஷாத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். நிஷாத் அந்த தகவல்களை கணினி மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி வெவ்வேறு ஊர்களில் இருந்து வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் அமர்நாத்தையும், அவரை சந்திக்க வந்த சதீஷ், நிஷாத் ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக அமர்நாத், சதீஷ், நிஷாத் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து வங்கி ஏ.டி.எம். தகவல்களை திருடி மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
நிஷாத் மற்றும் சதீஷ் ஆகியோர் இதேபோல் பல இடங்களில் ஏராளமான நபர்களுக்கு ஆசைவார்த்தைகள் கூறி ‘ஸ்கிம்மர்’ கருவிகளை கொடுத்து லட்சக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் பயன்படுத்தும் இடங்களில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் பயன்படுத்தும் பகுதியில் உள்ள ஊழியர்களை சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
குடியாத்தம் டவுன் போலீசார் இந்த மோசடி வழக்கில் தனியார் வங்கியின் தொழில்நுட்ப பிரிவின் உதவியை நாடி உள்ளனர். அவர்கள் அளித்த தொழில்நுட்ப உதவியால் டவுன் போலீசார் பல்வேறு சிரமங்களுக்கு இடையே துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். திறன்பட செயலாற்றி குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி, சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு, வேலூர் சரக டி.ஐ.ஜி வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story