கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
ராம நாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தாலியரேந்தல் கிராம மக்கள் குடிநீர் பிரச்சினை குறித்து முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
குடிநீர் பிரச்சினை குறித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தாலியரேந்தல் கிராம மக்கள் ராம நாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். இதுகுறித்து திரவியம் என்பவரது தலைமையில் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தாலியரேந்தல் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். இதுதொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு அளித்தோம். கலெக்டரின் உத்தரவின்பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் நடவடிக்கை எடுத்து திறந்தவெளி கிணறு அமைக்க முடிவு செய்து டெண்டர் விடப்பட உள்ளது. அந்தப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாததால் திறந்தவெளி கிணறு அமைத்தாலும் குடிநீர் கிடைக்காது. எனவே டெண்டரை ரத்து செய்து விட்டு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் ஏற்கனவே 3 திறந்தவெளி கிணறுகள் தோண்டப்பட்டு அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. இவ்வாறு அரசு பணத்தை மீண்டும் வீணடிக்காமல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Related Tags :
Next Story