கருங்கல் அருகே முதியவர் கல்லால் அடித்துக்கொலை தொழிலாளி கைது


கருங்கல் அருகே முதியவர் கல்லால் அடித்துக்கொலை தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 16 Feb 2019 8:56 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே முன்விரோதத்தில் முதியவரை கல்லால் அடித்துக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கருங்கல்,

கருங்கல் அருகே பூட்டேற்றி கொசவன்விளை பகுதியை சேர்ந்தவர் சபரிமுத்து (வயது 65), தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தொபியாஸ் (47), தொழிலாளி. தொபியாஸ் தினமும் மதுகுடித்து விட்டு சபரிமுத்துவிடம் தகராறு செய்து வந்ததால், அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சபரிமுத்து தனது வீட்டின் அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தொபியாஸ், சபரிமுத்துவை வழிமறித்தார். இதனால் அவர்களிடையே தகராறு நடந்தது. அப்போது ஆத்திரமடைந்த தொபியாஸ் அருகில் கிடந்த கல்லை எடுத்து சபரிமுத்துவை ஆவேசத்துடன் தாக்கினார். இதில் அவர் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் சபரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக தொபியாசை போலீசார் கைது செய்தனர். சபரிமுத்துவை கொலை செய்தபோது, தொபியாஸ் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story