தனியார் மண் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்


தனியார் மண் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அருகே தனியார் மண் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் ரேஷன் கார்டை அரசிடம் திருப்பி ஓப்படைத்து, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமெய்ஞானம் கிராமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மண் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டது. மண் குவாரியால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும், குவாரி அருகே மயானம் உள்ளதால் மண்ணரிப்பு ஏற்படும் என்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மண் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது, மண் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கிராம மக்கள், பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமெய்ஞானம் கிராம பொதுநல சங்க தலைவர் முனுசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் மண் குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. அப்போது பொதுமக்கள், மண் குவாரி உரிமத்தை ரத்து செய்யவில்லையென்றால் ரேஷன் கார்டை அரசிடம் திருப்பி கொடுப்போம் என்றும், வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர்.

Next Story