உடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி டிரைவர் கைது


உடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2019 3:45 AM IST (Updated: 17 Feb 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பைபாஸ் ரோட்டில் வேலப்ப செட்டி ஏரி அருகே நேற்று முன்தினம் இரவு 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்தவருக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

டிரைவர் கைது

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தது 3 பேரும், போர்பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் வினோத்ராஜன்(25), கழுவன்தோண்டி கிராமத்தை சேர்ந்த தங்கசாமி மகன் அன்புமணி(21), மூர்த்தியான் கிராமத்தை சேர்ந்த வைரம் மகன் ராஜ்குமார்(25) ஆகியோர் என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து லாரி டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த அல்லிமுத்துவை(25) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story