கொல்லிமலையில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் அரசு பஸ் தாமதமாக இயக்கப்படுவதாக புகார்


கொல்லிமலையில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் அரசு பஸ் தாமதமாக இயக்கப்படுவதாக புகார்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:18 AM IST (Updated: 17 Feb 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் அரசு பஸ் தாமதமாக இயக்கப்படுவதாக கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேந்தமங்கலம்,

கொல்லிமலை ஆலத்தூர்நாட்டில் நேற்று பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆலத்தூர்நாடு, குண்டணிநாடு, குண்டூர்நாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அரசு பஸ் இயக்க ஏற்பாடு செய்தனர். வழக்கமாக அதிகாலை நேரத்தில் நாமக்கல்லில் இருந்து புறப்படும் அந்த பஸ் வழியோர கிராமங்களை கடந்து காலை 9.30 மணிக்கு மேல் ஆலத்தூர்நாடு கிராமத்திற்குள் நுழைந்து கடைசி கிராமமான வேலிக்காடு கிராமம் வரை சென்று வருகிறது.

இந்த நிலையில் வாரநாட்களில் ஆலத்தூர்நாட்டில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மேடு அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு செல்ல அப்பகுதி மாணவ, மாணவிகள் காலை 8 மணிக்குள் தயாராகி செல்ல வேண்டும். ஆனால் அங்கு காலை 9.30 மணிக்கு மேல் அரசு பஸ் தாமதமாக வருவதால் மாணவிகள் பால் வேனிலோ அல்லது மாதம் ரூ.800 முதல் ரூ.1,000 வரை வாடகைக்கு வாகனங்களை பிடித்தோ செம்மேடு பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இதேபோல அங்குள்ள மகளிர் சுயஉதவி குழுவினர், வேலைக்கு செல்வோர் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலைமை இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்து உள்ளோம்.

எனவே ஆலத்தூர்நாடு பகுதிக்கு இயக்கப்படும் அந்த அரசு பஸ் காலை 8 மணிக்குள் வந்து செல்லுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு இதை கொண்டு செல்லவே இந்த சாலைமறியல் போராட்டத்தை நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சாலைமறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார் அங்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்தவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story