கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்கள்


கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்கள்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:45 AM IST (Updated: 18 Feb 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் 45 பேர் காயம் அடைந்தனர்.

கோவை,

கோவையில் 39 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதேபோல் இந்த ஆண்டும் கோவை செட்டிப்பாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் ஆகியவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதற்காக 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 8 மணிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலில் கோவை சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் காளையும், கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் எஸ்.பி.அன்பரசன் காளையும் அவிழ்த்து விடப்பட்டன. இந்த 3 காளைகளையும் மாடுபிடி வீரர்கள் யாரும் அடக்கவில்லை.

பின்னர் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 746 காளைகள் பங்கேற்றன. மதுரை, தேனி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 599 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் 17 குழுக்களாக பிரித்து அனுப் பப்பட்டனர். உரிய பரிசோதனைக்கு பின்னரே காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று அடக்கினார்கள். அதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களை கொம்பால் தூக்கி வீசி பந்தாடியது. போட்டியில் காளைகளை அடக்க முயன்ற மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த சங்கர் (வயது 26), சந்துரு (24) உள்பட 45 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியின் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

போட்டியில் சீறப்பாய்ந்து வந்த 13 காளைகளை அடக்கிய மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2 வீட்டுமனை மற்றும் மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.

உசிலம்பட்டியை சேர்ந்த விஜி என்பவரின் மாட்டை யாரும் பிடிக்காததால் கார் பரிசாக வழங்கப் பட்டது. 2-து இடம் பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் பிடிபடாத மாட்டின் உரிமையாளருக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் இருந்து தப்பிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சொந்த செலவில் தங்கக்காசுகளை பரிசாக வழங்கினார்.

எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. 2 மோட்டார் சைக்கிள்கள் வழங்கினார். இதுதவிர சில்வர் அண்டா, வெள்ளிக்காசு, ரொக்க பணம், ஹெல்மெட், இரும்புக்கட்டில், பீரோ, வேட்டி உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.

போட்டியை கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு வந்து பார்த்தனர்.இந்த போட்டியை காண வெளிநாட்டில் இருந்து 5 பேர் வந்திருந்தனர். போட்டியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் ராஜசேகர் வழி நடத்தினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன், பொள்ளாச்சி தொகுதி மகேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு, ஓ.கே.சின்னராஜ், கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் எஸ்.பி.அன்பரசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story