இடுபொருள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகள்


இடுபொருள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகள்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:30 PM GMT (Updated: 17 Feb 2019 7:48 PM GMT)

இடுபொருள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அரியலூர் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

விவசாயிகளுக்கான இடுபொருள் நிதியுதவி திட்டத்தில் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான திட்ட வழிமுறை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசு அறிவித்த பிரதம மந்திரியின் கிஸ்ஸான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளின் நிதி ஆதாராத்தை பெருக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. வருவாய்த்துறையின் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரித்து வரப்படும் பதிவேடுகளின் அடிப்படைகளில் 2 ஹெக்டேருக்கு (4.99 ஏக்கர்) குறைவாக நிலம் வைத்திருந்து அதில் பயிர் செய்தவர்களுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். முதல் தவணை தொகை வருகிற 20-ந் தேதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1 ஹெக்டேர் பயிர் செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் குடும்பத்தின் கணவன், மனைவி, மைனர் வாரிசு என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் என்றால் கணவன், மனைவி, வாரிசு ஆகியோர் அடங்கிய குடும்பமாக இருக்க வேண்டும். தகுதியான விவசாயிகள் தங்களது பெயர், வயது (பிறந்த தேதி), பாலினம், வகுப்பு ஆதார் எண், வங்கி கணக்கு எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண் மற்றும் விவசாய நிலத்தின் பட்டா, சிட்டா நகல் ஆகிய விவரங்களுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். குடும்பத்திலுள்ள ஒரு விவசாயிக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். எனவே அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலரிடம் உரிய விண்ணப்ப படிவத்தையும், சுய உறுதிமொழி படிவத்தையும் கொடுத்து, இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story