மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர் போராட்டம்; கிரண்பெடி- நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி


மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர் போராட்டம்; கிரண்பெடி- நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி
x
தினத்தந்தி 18 Feb 2019 12:00 AM GMT (Updated: 17 Feb 2019 9:05 PM GMT)

மக்கள் பிரச்சினைகளுக்காக முதல் அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பெடி நடத்த இருந்த பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்தது. இருவரும் நிபந்தனைகளை விதித்து சந்திக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி,

டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கவர்னர் கிரண்பெடி நேற்று மாலை புதுவை திரும்பினார்.

புதுவை கவர்னர் கிரண்பெடிக்கு எதிராகவும், மக்கள் நலத்திட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் தொடங்கினர். இதை ஆதரித்து தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர் களும் போராட்டத்தில் இறங்கினர்.

கவர்னர் மாளிகையை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு கிரண்பெடி சிறைபிடிக் கப்பட்டார். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்து துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்களது பாதுகாப்புடன் மறுநாள் அதாவது 14-ந் தேதி காலை கவர்னர் மாளிகையை விட்டு வெளியேறிய கிரண்பெடி டெல்லி புறப்பட்டுச் சென்றார். மீண்டும் அவர் வருகிற 20-ந் தேதி புதுவைக்கு திரும்புவார் என கவர்னர் மாளிகை வட்டாரம் தெரிவித்தது.

ஆனால் தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகை முன்பு விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்திய விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதற்கு தீர்வு காண முயற்சிக்காமல் கவர்னர் புறப்பட்டுச் சென்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கிடையே புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் புதுவையில் அசாதாரண சூழ்நிலை நிலவும் போது இதை கண்டுகொள்ளாமல் கவர்னர் கிரண்பெடி ஊரை விட்டு வெளியே சென்று விட்டார். எனவே அவருக்கு பதிலாக இடைக்கால கவர்னரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர் களும் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர்.

நேற்று 5-வது நாளாக கவர்னர் மாளிகை முன் போராட்டம் நீடித்தது. இந்தநிலையில் டெல்லியில் உள்ள நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு நேற்று காலை கவர்னர் கிரண்பெடி புதுவை திரும்பினார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் பகல் 11.30 மணியளவில் அவர் சென்னைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மதியம் 3.40 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு வந்து சேர்ந்தார்.

போராட்டம் நடத்தி வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்களை கவர்னர் சந்தித்து பேச விரும்புவதாகவும் மாலை 6 மணியளவில் நேரம் ஒதுக்கி இருப்பதாகவும் கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவ நீதிதாஸ் கடிதம் அனுப்பினார். இந்த அழைப்பை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். பதிலுக்கு அவரும் கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டத்தை தலைமை செயலகத்தில் நடத்த வேண்டும். அனைத்து அரசு செயலர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மாலை 5.30 மணி முதல் தலைமைச்செயலர் அஸ்வனி குமார் மற்றும் அரசு செயலாளர்கள் ராஜ்நிவாஸ் வரத்தொடங்கினர். ஆனால், முதல்-அமைச்சர் அனுப்பிய கடிதத்துக்கு கவர்னர் அலுவலகத்தில் இருந்து பதில் வரவில்லை. தொடர்ந்து அதற்காக முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் காத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் கவர்னர் கிரண்பெடி வாட்ஸ்-அப்பில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், ‘முதல்- அமைச்சரை மாலை 6 மணிக்கு கூட்டத்துக்கு அழைத்திருந்தேன். அவர் ராஜ்நிவாஸ் ஒருசார்பு இடம் என்பதால் தலைமை செயலகத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அனைத்து அரசு செயலாளர்கள் கோப்புடன் வரவேண்டும் என்று தெரிவித்திருந்தார். அத்துடன் எனது சிறப்பு பணி அதிகாரி கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இந்த கடிதத்துக்கு என்ன அர்த்தம் என்ற கேள்வி எழுகிறது. மனநிலையில் முதல்-அமைச்சருக்கு மாற்றம் தேவை. இதில் தேவையான விளக்கத்தை எனது தனி செயலரிடம் கேட்டு பெறலாம். விரைவில் விரிவான கடிதம் முதல்வருக்கு தருவேன்’ என்று தெரிவித்திருந்தார்.

இதையொட்டி இரவு 7.30 மணியளவில் ராஜ்நிவாஸில் இருந்து அரசு அதிகாரிகள் புறப்பட்டனர்.

அப்போது முதல் அமைச்சருக்கு கிரண்பெடி பதில் கடிதம் அனுப்பினார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கடந்த பிப்ரவரி 7-ந் தேதி தாங்கள் கொடுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறீர்கள். இந்த தர்ணாவை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இக்கோரிக்கைகள் குறித்து விவாதிக்க மாலை 6 மணிக்கு வரும்படி நேரம் ஒதுக்கி இருந்தேன்.

கவர்னர் மாளிகை முன்பு அரசியல் காரணங்களுக்காக நடைபெறும் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க எனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு உங்களுடன் சந்தித்து பேசுவதற்காக புதுச்சேரிக்கு திரும்பினேன்.

என்னுடன், நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த, எங்கு சந்திப்பு கூட்டத்தை நான் நடத்த வேண்டும், அதை எவ்வாறு நடத்த வேண்டும், யாரை நான் அழைக்க வேண்டும், யாரை நான் அழைக்கக்கூடாது என 4 நிபந்தனைகளை விதித்துள்ளர்கள். நீங்கள் எழுப்பிய கோரிக்கைகளை கேட்கவே உங்களை நான் அழைத்தேன். நீங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் கவர்னர் மாளிகையில் இல்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

உங்களது சுயநல அரசியல் லாபத்துக்காக என்னை சந்திக்க மறுக்கிறீர்கள் என்பது தெரியவருகிறது. நமது சந்திப்பு தற்போது நடைபெற்று இருந்தால் உங்களது சந்தேகங்களுக்கு நான் முழுவிளக்கம் அளித்திருக்க முடியும். அதேபோல நமது சந்திப்பு நடந்திருந்தால் பொதுமக்கள் முன்னிலையில் நாம் பங்கேற்கும் பொதுவிவாதம் தொடர்பான இடம், தேதி, நேரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்திருக்கலாம்.

பிப்ரவரி 7-ந் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் முழுவதையும் பொதுமக்களுக்கு நான் தெரிவிக்காவிட்டால் எனது கடமையில் இருந்து நான் தவறியது போல ஆகிவிடும். எனவே, இக்கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் விரைவில் தெரியப்படுத்த உள்ளேன். இருப்பினும் என்னை சந்திக்க விரும்பினால் எனது அலுவலகத்தை நீங்கள் தொடர்புகொள்ளலாம். அதை நான் பரிசீலிப்பேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவர்னர் கிரண்பெடியும்- முதல் அமைச்சர் நாராயணசாமியும் நடத்தப் போகும் பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று அனைவராலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறாமல் கவர்னரும், முதல் அமைச்சரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் தெரிவித்து கடிதம் வெளியிட்டதால் பேச்சுவார்த்தை இழுபறி ஆகி தோல்வியில் முடிந்தது.

இதனால் கவர்னர்- அமைச்சரவை மோதல் விவகாரம் புதுச்சேரி அரசியலில் மேலும் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

Next Story