பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிலை திருட்டு: மேலும் ஒருவர் கைது 4-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு


பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிலை திருட்டு: மேலும் ஒருவர் கைது 4-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
x
தினத்தந்தி 19 Feb 2019 3:45 AM IST (Updated: 19 Feb 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலை உடைத்து சிலை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரை 4-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கும்பகோணம்,

கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 12-ந் தேதி பூட்டை உடைத்து 2½ அடி உயரமுள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டத்து அரசிஅம்மன் ஐம்பொன் சிலை, கோவில் உண்டியலில் இருந்த பணம், தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கோவில் செயல் அலுவலர் ரமேஷ்குமார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்

இதன் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மருதாசலம் மகன் தண்டபாணி (வயது 32) என்பவரை கடந்த 13-ந் தேதி கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து பட்டத்தரசி அம்மன் ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்து, கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய, கோவை, புலியங்குளம், ஏரிமேடு பகுதியை சேர்ந்த கோபால் மகன் முருகன்(26) என்பவரை போலீசார் கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். முருகனை அடுத்த மாதம்(மார்ச்) 4-ந் தேதி(திங்கட்கிழமை) வரை காவலில் வைக்க நீதிபதி அய்யப்பன்பிள்ளை உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முருகனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கோவை பட்டத்தரசியம்மன் கோவில் சிலை திருட்டு வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story