கவர்னர் மூலம் மத்திய அரசு தொல்லை: முதல்-அமைச்சர்கள் போராட்டங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி


கவர்னர் மூலம் மத்திய அரசு தொல்லை: முதல்-அமைச்சர்கள் போராட்டங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2019 12:00 AM GMT (Updated: 18 Feb 2019 11:38 PM GMT)

டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் புதுச்சேரி மக்களை ஆள்கிறார் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வேதனையுடன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகை முன்பு கிரண்பெடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் நேரிலும், டெலிபோனிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று புதுச்சேரி வந்து நாராயணசாமியை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் கவர்னர் மத்திய பாரதீய ஜனதா அரசால் நியமிக்கப்பட்டவர்.

அவர் புதுவை அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுகிறார். இது அதிர்ச்சி அளிக்கிறது. அரசின் நடவடிக்கைகளை மீறி அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறார். அமைச்சரவையின் முடிவுகளையும் மீறுகிறார். ஜனநாயகத்தை மீறி சட்டத்தை கொல்கிறார்.

டெல்லி கவர்னரும் இதையே செய்து வருகிறார். கிரண்பெடி டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். இங்கு வந்து மக்களை ஆள்கிறார். இது ஜனநாயகம் அல்ல. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தபின் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் தொல்லை கொடுப்பதால் அம்மாநில முதல்-மந்திரிகள் இதுபோன்ற போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

டெல்லியிலும், புதுச்சேரியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு தொல்லை கொடுக்கவே கவர்னர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதை அவர்கள் செய்யாவிட்டால் மத்திய அரசால் நீக்கப்பட்டு விடுவார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் புதுச்சேரி, டெல்லிக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. இதுபோன்ற பிரச்சினைகள் தீர புதுச்சேரி, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

இப்போது நடப்பது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்துக்கான பிரச்சினை. நாளை வேறு கட்சியின் ஆட்சி வரலாம். எனவே இந்த பிரச்சினையில் நாம் இணைந்து போராடுவோம். கவர்னர் கிரண்பெடிக்கு நான் சொல்வதெல்லாம் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

தொடர்ந்து அவர் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது ‘கிரண்பெடியே திரும்பிப்போ’ என்ற வாசகங்களுடன் கூடிய படத்தை கையில் ஏந்தியபடி கோஷமிட்டார்.

Next Story