திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:30 PM GMT (Updated: 19 Feb 2019 7:40 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

திருச்செந்தூர்,

‘தமிழ் கடவுள்’ முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக பெருமை பெற்று விளங்கும் ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று கோலாகலமாக நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கீழ ரத வீதி தேரடி திடலில் உள்ள சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் சுவாமி குமரவிடங்க பெருமானும், மற்றொரு தேரில் தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர்.

அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேர்களில் எழுந்தருளிய விநாயகர், சுவாமி-அம்பாள்களுக்கு சூட்டுவதற்காக ஏராளமான மாலைகளை வழங்கினர். அந்த மாலைகள் விநாயகர், சுவாமி-அம்பாள்களுக்கு சூட்டப்பட்டன. காலை 6.26 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அந்த தேர் நான்கு ரத வீதிகளைச் சுற்றி, காலை 7.35 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து காலை 7.43 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரோட்டம் தொடங்கியது. கோவில் தக்காரும், ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனருமான இரா.கண்ணன் ஆதித்தன், இரா.கதிரேச ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, கோவில் இணை ஆணையர் பாரதி, பா.ஜ.க. மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார், காயாமொழி முப்புராதி அம்மன் கோவில் அக்தார் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தங்கேச ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், குமரேச ஆதித்தன், சிவனேச ஆதித்தன், முருகன் ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அலங்கரிக்கப்பட்ட தெய்வானை யானை முன்செல்ல, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

மேலும் ஏராளமான பக்தர்கள் மேள வாத்தியங்களுடன் பஜனை பாடல்களை பாடியவாறு, தேரின் முன்பாக சென்றனர். பக்தர் ஒருவர் மயில் இறகுகளால் செய்யப்பட்ட பெரிய விசிறியால், தேர் இழுத்த பக்தர்களுக்கு விசிறியவாறு சென்றார். பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு ரத வீதிகளிலும் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

தேரோட்டம் தொடங்கியதும், வானத்தில் 3 கருடன்கள் வட்டமிட்டன. மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள், தேரின் முன்பாக காவடி எடுத்து ஆடியவாறு சென்றனர். சுவாமி தேர் காலை 9.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து தேரில் வீற்றிருந்த சுவாமி-அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் தேரை தொட்டு வணங்கி, சுவாமி-அம்பாள்களை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 3-வதாக தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேரோட்டம் நடந்தது. காலை 9.55 மணிக்கு தெய்வானை அம்பாள் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சுற்றி வந்த தேர் காலை 11.20 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் நீதிபதிகள் சிவாஜி செல்லையா, தினேஷ்குமார், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், உள்துறை கண்காணிப்பாளர் வெள்ளச்சாமி, மின்வினியோக செயற்பொறியாளர் பிரபாகரன், இந்து முன்னணி மாநில தலைவர் அரசு ராஜா, அ.தி.மு.க. முன்னாள் தொகுதி செயலாளர் வடமலை பாண்டியன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்ட விழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து, தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

வணிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில், ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்-மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் புறநகர் பகுதியில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

11-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் எழுந்தருளி, சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபத்தை சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி-அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி, 11 முறை சுற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்கள்.

Next Story