சீரமைப்பு பணி நிறைவு, அரசு மருந்தகம் மீண்டும் திறப்பு
சீரமைப்பு பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, கூடலூர் அரசு மருந்தகம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்,
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்கூடலூரில் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு விபத்து கால அவசர சிகிச்சை பிரிவு, நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகள், பிரசவ கால வார்டுகள் என பல பிரிவுகள் உள்ளன. நீண்ட தொலைவில் தலைமை ஆஸ்பத்திரி உள்ளதால் கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகளின் வசதிக்காக கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் அரசு மருந்தகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இங்கு மருத்துவர், நர்சுகள், மருந்தாளுநர் உள்பட பல சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் மருந்தக கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் பலத்த மழையால் அரசு மருந்தகத்துக்குள் தண்ணீர் வழிந்தோடியது.
மேலும் மருத்துவர் மற்றும் ஊசி போடும் அறை, நோயாளிகள் அமரும் அறைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாக அரசு மருந்தக கட்டிடத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நேற்று முதல் அரசு மருந்தகம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டும், வரவேற்பும் அளித்து உள்ளனர்.
Related Tags :
Next Story