மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விவரங்களை சரிபார்க்க சிறப்பு முகாம் 23, 24-ந் தேதிகளில் நடைபெறுகிறது


மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விவரங்களை சரிபார்க்க சிறப்பு முகாம் 23, 24-ந் தேதிகளில் நடைபெறுகிறது
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 6:58 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 1,850 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ள வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி, 

இது குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம் 2019-ன் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1,850 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்க்க வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்த முகாம் நாட்களில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்படும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிப்பார்த்து கொள்ளலாம். இப்பட்டியலில் வாக்காளரின் பெயர் விடுபட்டிருந்தால் அன்றே படிவம் 6-ல் வாக்காளராக பெயர் சேர்க்க விண்ணப்பித்துக் கொள்ளலாம். 1.1.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் இதுவரை வாக்காளர் பட்டியிலில் தங்கள் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் வாக்காளராக பதிவு செய்ய உரிய படிவம் அளித்து, தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தங்கள் பதிவினை சரிபாத்தல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றிருந்தால், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் ஊனத்தின் விவரத்தினை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் தெரிவித்து, வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிப்பதற்கு ஏதுவான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளலாம்.

புதியதாக வாக்காளராக பதிவு செய்ய www.nvsp.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தால், அதன் விவரங்களை தெரிந்து கொள்ள மாவட்ட தகவல் மைய (வாக்காளர் உதவி) கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 என்ற எண்ணையோ அல்லது “Voter Helpline” என்ற ஆண்ட்ராய்டு செயலிலையோ அல்லது www.nvsp.in என்ற இணையதள முகவரியையோ பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story