கடலூரில், 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை, கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை
கடலூரில் 2 மகன்களை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் பாதிரிக்குப்பம் டி.ஆர்.நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவர் கூத்தப்பாக்கம் மெயின்ரோட்டில் மருந்து கடை வைத்துள்ளார். இவரும், கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சிவசங்கரி(வயது 32) என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பாவேஷ் கண்ணா(12), ரதீஷ் கண்ணா (9) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் பாவேஷ்கண்ணா தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும், அதே பள்ளியில் ரதீஷ்கண்ணா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 18-ந்தேதி வீட்டில் உள்ள அறையில் 2 மகன்களையும் சிவசங்கரி கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தனித்தனியாக 4 கடிதங்களையும் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதங்களில் தன்னுடைய கணவர் பொறுமையானவர். என்னுடைய சாவுக்கு நானே காரணம் போன்ற பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
இது பற்றி தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது பற்றி சிவசங்கரியின் தாய் சுமதி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக 2 மகன்களையும் கொன்று விட்டு சிவசங்கரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே 2 மகன்களின் கழுத்திலும் நகக்கீறல்கள் இருந்ததால், அவர்களை கழுத்தை நெரித்து சிவசங்கரி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். ஆனால் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த போது, அவர்களின் கழுத்து நெரிக்கப்படவில்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களின் உடல்களில் விஷம் கலந்து இருப்பதாக கூறியதாகவும் தெரிகிறது. ஆகவே சிவசங்கரி 2 பேரையும் விஷம் கொடுத்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரத்தையும் தெளிவாக கூற முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது பற்றி போலீசார் கூறுகையில், சிவசங்கரிக்கும், அவரது கணவரான மருந்து கடை உரிமையாளர் மதிவாணனுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. மேலும் அவர் வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்திருக்கிறார். இதுவும் அவர் 2 மகன்களை கொன்று தற்கொலை செய்திருக்க காரணமாக இருந்திருக்கலாம். இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் தான் உண்மையான காரணத்தை கூற முடியும் என்றனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் தொடர்பாக சிவசங்கரி உறவினர்களுக்கும், மதிவாணன் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story