ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்களுடன் விவசாயிகள் போராட்டம்
புதுவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்களுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் வேளாண்துறையின் கீழ் இயங்கி வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் உள்பட விவசாயிகளின் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு எடைபோட ஆட்கள் இல்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன்பு தங்கள் கொண்டு வந்த விளைபொருட்களை வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் விளைபொருட்களை எடைபோட வேண்டும், ஊழியர்களின் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது பற்றிய தகவல் அறிந்த விற்பனைக்கூட அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 10 நாட்களில் 2 மாத சம்பளத்தை வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு தங்கள் பணிகளை தொடங்கினர். இதனை தொடர்ந்து விவசாயிகளும் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கனூரை அடுத்த கூனிச்சம்பட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் நேற்று காலை விவசாயிகள் நெல் மற்றும் வேளாண் விளை பொருட்களை கொண்டு வந்தனர். ஆனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் விவசாயிகள் கொண்டு வந்த விளை பொருட்களை எடை போட மறுத்தனர்.
அதன் காரணமாக விற்பனைக்கூட ஊழியர்களுடன், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விற்பனைக்கூட ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள் கொண்டு வந்த விளை பொருட்களை எடை போட்டனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.