கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அசோக்குமார் எம்.பி., கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டனர்
கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அசோக்குமார் எம்.பி., கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று அமைக்கப்பட்டிருந்தது. அதை கிருஷ்ணகிரி கே.அசோக்குமார் எம்.பி., மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவிற்கு வந்தவர்களை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் வரவேற்றார்.
இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த அரசு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள், தமிழக அரசின் பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம் என 150-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.
அதை ஏராளமான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம், கூட்டுறவு சங்க தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story