திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் என்ஜினீயர் பலி மேலும் 2 பேர் படுகாயம்


திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் என்ஜினீயர் பலி மேலும் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Feb 2019 11:15 PM GMT (Updated: 25 Feb 2019 6:50 PM GMT)

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் என்ஜினீயர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மலைக்கோட்டை,

கடலூரில் இருந்து கரூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலைக்கு ஜிப்சம் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டு இருந்தது. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் குணசேகர் (வயது 57) லாரியை ஓட்டி சென்றார். அந்த லாரி திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகே வந்தபோது, தில்லைநகரில் இருந்து தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கும் மதுரையை சேர்ந்த என்ஜினீயர்கள் அஜீத்குமார்(22), சூர்யா(22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மேலசிந்தாமணி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் என்ஜினீயர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிர்புறம் கரூரில் இருந்து தஞ்சை நோக்கி மணல் ஏற்றி சென்ற மற்றொரு லாரியும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன் டிப்பர் லாரியின் பக்கவாட்டில் மோதியது. அப்போது அந்த லாரியின் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அஜீத்குமார், சூர்யா ஆகியோர் லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். டிப்பர் லாரி டிரைவர் குணசேகரும் படுகாயம் அடைந்தார்.

விபத்தை கண்ட அந்த பகுதியினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், அவர்களை உடனடியாக மீட்க முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி லாரியின் அடியில் சிக்கி கிடந்த என்ஜினீயர்கள் மற்றும் லாரி டிரைவர் குணசேகர் ஆகியோரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து அஜீத்குமார் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

விபத்து ஏற்பட்டவுடன் கரூரில் இருந்து வந்த லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சுப்பன், பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான இரண்டு லாரிகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் விக்னேஷ்வரன் மற்றும் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கிழக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நெடுஞ்செழியபாண்டியனும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். 

Next Story