பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவிழா: குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா


பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவிழா: குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 25 Feb 2019 10:30 PM GMT (Updated: 25 Feb 2019 9:18 PM GMT)

பிடாரியார் இரணியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

ஸ்ரீரங்கம்,

திருவானைக்காவல் அருகே பிடாரியார் இரணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசிமாதத்தில் ஒருவாரம் நடைபெறும். கடந்த 35 ஆண்டுகளாக நின்று போயிருந்த இத்திருவிழா காப்பு கட்டுதல்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முதல்நாளான நேற்று முன்தினம் யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். நேற்று குதிரை வாகனத்தில் அம்மன் வீதிஉலா புறப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) 3-ம் காப்பு கட்டப்பட்டு பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காளியா வட்டம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இரணியம்மன் கோவிலின் பதிவுக்கோவிலான திருவானைக்காவல் சன்னதி வீதி காளி கோவிலில், மருளாளி காளிவேடமிட்டு பக்தர்கள் புடைசூழ புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வருகிறார். வழியில் வடக்கு உள்வீதியில் காளிக்கு நடைபெறும் அடசல் எனப்படும் அசைவ உணவுகள் படைக்கப்படும். பூஜையில் கலந்து கொண்டபின் காளிதேவி கொண்டயம்பேட்டையில் உள்ள மூலக்கோவிலுக்கு செல்வார். மற்றொருபுறம் தீயசக்திகளை விரட்டும் நிகழ்ச்சியான படுகளம் நடைபெறுகிறது.

நாளை(புதன்கிழமை) அம்மன் பூந்தேரில் வீதியுலா வருகிறார். அப்போது வழிநெடுக பக்தர்கள் ஆடுகள் பலியிட்டும், மாவிளக்கு வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர். மார்ச் 2-ந் தேதிவரை ஊரின் பல பகுதிகளுக்கு செல்லும் இரணியம்மனின் தேர், அன்று இரவு கோவிலை அடையும். அத்துடன் விழா நிறைவடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் ஜெயப்ரியா தலைமையில், கோவில் அலுவலர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Next Story