ஜெயங்கொண்டத்தில் மின்சாரம் வழங்கக்கோரி குடும்பத்துடன் விவசாயி தற்கொலை முயற்சி பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
ஜெயங்கொண்டத்தில் மின்சாரம் வழங்கக்கோரி குடும்பத்துடன் விவசாயி தற்கொலைக்கு முயன்றார். மின்சாரம் வழங்க கூடாது என்று கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 51). இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு பெற்று, ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டார் மூலம் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கண்ணன் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது ஊருக்குள் செல்லும் மின்சார இணைப்பில் அடிக்கடி பழுது ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணனின் விவசாய நிலத்தில் இருந்த மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டபோது ஊருக்குள் செல்லும் மின்சாரமும் தடைபட்டது. இதனை அறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் மின்மோட்டாருக்கு செல்லும் இணைப்பை மட்டும் துண்டித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், அவர்கள் தங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாததால் நிலத்தில் பயிர் செய்துள்ள கடலைகள் காய்ந்து வருகிறது. எனவே உடனடியாக மின்சார இணைப்பு வழங்கவேண்டும் எனக்கோரிக்கை விடுத்தனர். அப்போது கண்ணன், தனது குடும்பத்தினருடன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் கண்ணனின் மின்மோட்டாருக்கு மின்சார இணைப்பு கொடுக்க மின் ஊழியர் சம்பந்தப்பட்ட மின்மாற்றி உள்ள இடத்திற்கு சென்றார். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள், மின்மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுப்பதால் ஊருக்குள் வரும் மின் இணைப்பில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்படுகிறோம். எனவே கண்ணன் வயலுக்கு என்று தனி மின் மாற்றி அமைத்து மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறி ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஒன்றுகூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீசார் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் சாமித்துரை, சிலம்பரசன் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், விவசாய நிலத்திற்கு மின்சாரம் வினியோகம் செய்ய தனியாக ஒரு மின்மாற்றியும், ஊருக்குள் மின்சாரம் வினியோகம் செய்ய தனியாக ஒரு மின்மாற்றியும் அமைக்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகளுக்கு தனித்தனியாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story