மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமருவார் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமருவார் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 4 March 2019 4:45 AM IST (Updated: 4 March 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் நாற்காலியில் அமருவார் என கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

கரூர்,

கரூரில் மாவட்ட தி.மு.க. சார்பில், மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிரிக்கெட், கபடி, கைப்பந்து, கோ-கோ உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது. இதில் கிரிக்கெட், கபடி உள்ளிட்டவற்றின் இறுதி போட்டிகள் மற்றும் கயிறு இழுத்தல், கோலப்போட்டி உள்ளிட்டவை ஒரே நேரத்தில் திருமாநிலையூர் ராயனூர் ரோட்டில் உள்ள திடலில் நேற்று நடந்தது. இதனை மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதற்கிடையே கரூர் அரசு காலனி பகுதியில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில் பெரியமாடு (8 மைல்), நடுமாடு (6 மைல்), கரிச்சான் மாடு (5 மைல்) ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

மதியம் கரூர்-ஈரோடு சாலையில் கரூர் பாலிடெக்னிக் முன்பு குதிரை பந்தயம் நடந்தது. பந்தயம் பெரியகுதிரை, சிறியகுதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப் பட்டனர்.

அதனை தொடர்ந்து கரூர் சி.எஸ்.ஐ. விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் தனித்தனியாக நடத்தப்பட்டன. கரூரின் முக்கிய வீதிகள் வழியாக ஓடிய வீரர்-வீராங்கனைகள் முடிவில் சி.எஸ்.ஐ. மைதானத்தில் வந்து ஓட்டத்தை நிறைவு செய்தனர். இதிலும் முதல் நான்கு இடம் பிடித்தவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே கரூர் பிரேம் மகாலில் ஆண்கள், பெண்களுக்கு என சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக கரூர் அன்பு கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கியதோடு, அரசு காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க. கொடியேற்றி வைத்து உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கரூரில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவது, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞர் எழுச்சிநாள் பொதுக்கூட்டம் சி.எஸ்.ஐ. விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலிலும் மக்கள் விரோத அ.தி.மு.க., பா.ஜ.க. அரசின் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என இளைஞர்கள் சூளுரை ஏற்க வேண்டும். மேலும் ஆளும் கட்சியினர் கரூர் மாவட்ட தொகுதிகளுக்கு எந்தஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை, 666 கோப்பைகளை வழங்கினார். மேலும் ஸ்கூட்டர், தையல் எந்திரம் உள்பட ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- நலத்திட்ட உதவிகள்-பரிசு வழங்கும் நிகழ்ச்சி என கூறிவிட்டு இளைஞர்களை திரட்டி சாதூரியமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதுபோல் தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ? அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என செந்தில்பாலாஜி அவரையே சாதூரியமாக குறிப்பிட்டு பேசினார். இதை வைத்து பார்க்கையில் இடைதேர்தலில் ஒரு தொகுதி அவருக்கு நிச்சயமாகிவிட்டது என தோன்றுகிறது.

தி.மு.க.வின் ஊராட்சிசபை கூட்டத்தில் மக்களின் எழுச்சி உள்ளிட்டவற்றை பார்த்து தமிழக முதல்-அமைச்சருக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது. இதன் காரணமாக தி.மு.க. குடும்ப கட்சி என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார். இதனை துளி அளவும் கூட ஏற்கமுடியாது. கருணாநிதிக்கு, பிறகு மு.க.ஸ்டாலின் உழைப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் நான் கடைக்கோடி தொண்டர்களின் ஒருவனாகவே இருக்கிறேன். ஊராட்சி சபை கூட்டங்களின் மூலம் குறைகளை கேட்டறிந்து, அதனை நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் சேர்த்து நிறைவேற்றித்தர முனைப்புடன் செயல்படுகிறோம். அந்தவகையில் தற்போது மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்குகிறார்கள். விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமருவார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மாநில தி.மு.க. விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, பொதுக்குழு உறுப்பினர் வி.கே.டி.ராஜ்கண்ணு, முன்னாள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கா.அன்பரசன், டாக்டர் சி.நல்லதம்பி, ம.சி.செந்தில், தாந்தோணி ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.ரகுநாதன், பரமத்தி ஒன்றிய செயலாளர் கே.கருணாநிதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி.ஏ.இளவரசு, கரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.கந்தசாமி, பிரதிநிதி தோரணக்கல்பட்டி கார் இளங்கோவன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் தெற்கு நகர செயலாளர் வக்கீல் சுப்ரமணியன் நன்றி கூறினார். 

Next Story