டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி அருகே உள்ள பாஞ்சாலியூர் பாசின் நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- எங்கள் கிராமத்தின் அருகில் சின்னதாளப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் உள்ள காந்தி சிலை அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து தான் சென்று வர வேண்டும்.
இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுபிரியர்கள் மது வாங்கி, அங்கேயே குடித்துவிட்டு முகம் சுழிக்கும் வகையில் பஸ் ஸ்டாப் அருகில் சுற்றித்திரிவதும், தகாத வார்த்தையால் ஆபாசமாக பேசுவதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் மாணவிகள் மிகவும் அச்சத்துடன் வரவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
அத்துடன் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி திருட்டும் நடைபெறுகிறது. இதனால் இந்த சாலையில் பெண்கள் நடமாட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி, இங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பூதரெட்டியப்பா, சி.பி.ஐ. மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா, ஒன்றிய செயலாளர் சிவராஜ் ஆகியோர் தலைமையில் தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் பிரபாகரிடம் தனித்தனியாக மனு அளித்தனர்.
அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:- கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் சொந்த வீடுகளின்றி உள்ளனர். இவர்களுக்கு வீடு கட்ட இடம் வழங்கக்கோரி பல முறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தவே பற்றாக்குறை உள்ள போது, எங்களால் சொந்தமாக வீடு கட்ட முடியவில்லை. எனவே, எங்களுக்கு அரசு இலவசமாக 3 சென்ட் இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story