5 மாவட்டங்களின் நீராதாரமான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 114.40 அடியாக சரிவு - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.40 அடியாக குறைந்து உள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
தேனி,
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி இந்த அணை நிரம்பியது. சில நாட்களில் நீர்மட்டம் குறைக்கப்பட்டது. பின்னர் அணையில் இருந்து தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாமல் ஏமாற்றியது.
இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் மேலும் சரிய தொடங்கியது. தற்போது மழைப் பொழிவு இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 114.40 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 36 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 1,627 மில்லியன் கன அடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் (மார்ச் 4-ந்தேதி) அணையின் நீர்மட்டம் 113.30 அடியாக இருந்தது. அதையொட்டி மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் தற்போதே கடுமையான வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. எனவே இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோடை மழை கைகொடுத்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story