அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் ஓய்வூதிய திட்டம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் ஓய்வூதிய திட்டம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 March 2019 4:30 AM IST (Updated: 5 March 2019 8:10 PM IST)
t-max-icont-min-icon

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதமரின் ஓய்வூதிய திட்டத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

பிரதம மந்திரியின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து குமரி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடக்க விழா நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் சுமன் சவுரவ் வரவேற்றார். மண்டல ஆணையாளர்கள் ரமேஷ், சனத்குமார், தொழிலாளர் நல இணை ஆணையர் ஹேமலதா, தொழிலாளர் ஈட்டுறுதிக்கழக உதவி ஆணையர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.

முன்னதாக பிரதமர் மோடி பங்கேற்ற இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி குஜராத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்த விழா மேடையில் அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 500 பேரை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும். இந்த திட்டத்தில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் பங்கேற்று பயனடைய வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் தேவ், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், உமாரதி ராஜன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story