பாளையங்கோட்டையில் விபத்து: காயம் அடைந்த குழந்தையை காரில் ஏற்றி ஆஸ்பத்திக்கு கொண்டு சென்ற கலெக்டர்
பாளையங்கோட்டையில் தடுப்புச்சுவரில் கார் மோதிக் கொண்டதில் காயம் அடைந்த குழந்தையை தனது காரில் ஏற்றி கலெக்டர் ஷில்பா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
நெல்லை,
நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் தினேஷ்ராஜ். இவர், விஞ்ஞானியான பணியாற்றி வருகிறார். இவர் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் தாழையூத்து வந்து கொண்டு இருந்தார். காரில் மனைவி சுஜிதா (29). மாமியார் விஜயலட்சுமி, மகன் பிரனாராய் (3) ஆகியோர் இருந்தனர்.
கார் பாளையங்கோட்டை சீனிவாசநகர் பகுதியில் காலை 10.45 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனர்.
அப்போது அந்த வழியாக பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் நடக்கும் அரசு விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா காரில் சென்று கொண்டு இருந்தார். கார் விபத்தில் சிக்கியதை பார்த்ததும் தனது காரை நிறுத்தினார்.
உடனே 4 பேரையும் தனது காரில் ஏற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் சிறுவன் பிரனாராயை மட்டும் தனது காரில் ஏற்றினார். மேலும் அந்த வழியாக நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் ஆனந்தராஜ் காரில் வந்தார். அவர் காயமடைந்த மற்ற 3 பேரையும் தனது காரில் ஏற்றி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். கலெக்டர் ஷில்பா, அந்த குழந்தையை அதே ஆஸ்பத்திரியில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டு கொண்டார். பின்னர் அவர் அரசு விழாவுக்கு புறப்பட்டு சென்றார்.
அவர்கள் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story