காஞ்சீபுரம் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
காஞ்சீபுரம் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே உள்ள தாத்தியாதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.மதுசூதனன் (வயது 28). இவர் பட்டு நெசவு தொழிலாளி. மதுசூதனும் அவருடைய நண்பர்களும் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள காலி பங்களாவில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மற்றொரு கும்பல் மோட்டார்சைக்கிளில் வந்தது.
அந்த கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த கும்பல் மதுசூதனை மரக்கட்டையால் தாக்கியது. மேலும் கத்தியால் உடலில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மதுசூதனை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மதுசூதனன் பரிதாபமாக இறந்தார்.
மதுசூதனை கொன்றது அதே பகுதியில் கஞ்சா விற்கும் கும்பல் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.