வேன் மீது மோதல்: மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து கல்லூரி மாணவர் உடல் கருகி சாவு நண்பர் காயம்
தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சாலையில் முன்னால் சென்ற வேன் மீது மோதியதில் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் கல்லூரி மாணவர் உடல் கருகி பலியானார். அவரது நண்பர் காயம் அடைந்தார்.
பூந்தமல்லி,
சென்னை கொடுங்கையூர், காமராஜர் சாலையை சேர்ந்தவர் இருளாண்டி. இவருடைய மகன் ராஜ்குமார்(வயது 19). இவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
பெரம்பூரை சேர்ந்த பிரான்சிஸ் விக்டர்(19) என்பவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். நண்பர்களான இருவரும் தினமும் ஒன்றாகவே மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று மாலை வழக்கம்போல் கல்லூரி முடிந்து நண்பர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ராஜ்குமார் ஓட்டினார். அவருக்கு பின்னால் பிரான்சிஸ் விக்டர் அமர்ந்து இருந்தார்.
தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சாலையில் மாங்காடு அடுத்த கோவூர் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லோடு வேன் மீது மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பின்னால் அமர்ந்து வந்த பிரான்சிஸ் விக்டர் தூக்கி வீசப்பட்டார்.
மோதிய வேகத்தில் ராஜ்குமார், மோட்டார்சைக்கிளோடு சாலையில் உரசியபடியே சிறிது தூரம் சென்றார். இதனால் மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் படுகாயம் அடைந்ததாலும், மோட்டார் சைக்கிளுக்கு அடியில் கால் சிக்கிக் கொண்டதாலும் ராஜ்குமாரால் உடனடியாக எழுந்து வரமுடியவில்லை.
அதற்குள் அவர் மீதும் தீப்பிடித்துக்கொண்டு உடல் முழுவதும் தீ பரவியது. இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்களிடமிருந்த தண்ணீர் மற்றும் சாலையோரம் கிடந்த மண்ணை கொட்டி அவர் மீது எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் அதிகமாக இருந்ததால், மோட்டார் சைக்கிள் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அருகில் செல்ல பொதுமக்கள் பயந்தனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ராஜ்குமார் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ராஜ்குமார், உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து எலும்புக்கூடானது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், இந்த விபத்தில் காயம் அடைந்த பிரான்சிஸ் விக்டரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பலியான ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லோடு வேன் டிரைவர் செந்தில்(24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.