அ.தி.மு.க.வுடன் ரங்கசாமி சந்தர்ப்பவாத கூட்டணி; நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு - முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் சொல்கிறார்


அ.தி.மு.க.வுடன் ரங்கசாமி சந்தர்ப்பவாத கூட்டணி; நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு - முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் சொல்கிறார்
x
தினத்தந்தி 9 March 2019 11:45 PM GMT (Updated: 9 March 2019 11:00 PM GMT)

அ.தி.மு.க.வுடன் ரங்கசாமி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறினார்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணியினர் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பேசியதாவது:-

புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, கவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார். கவர்னர் கிரண்பெடியை வைத்து மத்திய அரசு புதுவையில் போடும் பல்வேறு முட்டுக்கட்டைகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி தகர்த்தெறிந்து வருகிறார். அதில் ஒன்று தான் கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர்கள் நடத்திய தொடர் போராட்டத்தால் பல்வேறு முக்கிய கோப்புகளுக்கு கையெழுத்து போடப்பட்டது.

முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை, மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா துரோகி என்று பேசினார். ஆனால் தற்போது அவருடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அவர்களது சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். எனவே புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான சூழல் பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story