நல்லம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளர்கள் 2 பேர் பலி
நல்லம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஅள்ளி, பெத்தஆற்று கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(வயது45). இதேபகுதியை சேர்ந்த இவருடைய உறவினர் ரத்தினவேல்(45). தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று சொந்த வேலையாக அதியமான்கோட்டைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.
சேலம்– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புறவடை என்ற இடத்தில் இவர்கள் சென்ற போது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், ரத்தினவேல் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மனோகரன், ரத்தினவேல் ஆகிய 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் 2 பேர் விபத்தில் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.