பள்ளிபாளையம், ராசிபுரத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் - அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா தொடங்கி வைத்தனர்


பள்ளிபாளையம், ராசிபுரத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் - அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 10 March 2019 11:46 PM GMT (Updated: 10 March 2019 11:46 PM GMT)

பள்ளிபாளையம், ராசி புரத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா தொடங்கி வைத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ஆவரங்காடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், கர்ப்பிணிகளுக்கு சத்துணவு அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன் முன்னிலை வகித்தார்.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். மேலும் கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு உள்ளிட்டவை அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, கர்ப்பிணிகள், கர்ப்ப காலம் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து தங்கள் உடலையும், கருவில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி குறித்தும் பரிசோதித்து செல்ல வேண்டும். அவ்வாறு வரும்போது உங்கள் பெயர் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். பிரசவ காலத்தில் சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விடுகிறார்கள். இதனால் கணக்கெடுப்பு பணியில் குழப்பம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அப்போது அவர் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார். மேலும், தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை புத்தகம் ஆகியவற்றை முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் உதவி கலெக்டர் சு.கிராந்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார். பிறகு ரூ.10 லட்சம் மதிப்பில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் உபகரணங்கள் அடங்கிய டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன், மோகனூர் சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கத் தலைவர் சுரேஷ்குமார், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், மாணவர் அணி செயலாளர் ஜெகன், முன்னாள் கவுன்சிலர்கள் சீரங்கன், ஸ்ரீதர், சூப்பர் பட்டு சொசைட்டி இயக்குனர் செல்வம், ஆர்.இ.குமார், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் கலைவாணி, ஹேமலதா, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி உதவி மருத்துவர் கலைச்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் செல்வி, தாசில்தார் சாகுல் அமீது, ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராசிபுரத்திற்கு வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை என்பதை நானும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும் உள்ளாட்சித்துறை அமைச்சரோடு கலந்து பேசி உள்ளோம். அப்போது ராசிபுரம் நகரத்திற்கு என தனியாக கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ராசிபுரம் நகரத்தில் எல்லா சாலைகளும் சிறப்பான சாலைகளாக அமைவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. வருகிற தண்ணீரை பாதுகாத்து சிக்கனமாக செலவிட வேண்டும் என்பது குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story