தேர்தல் அறிவிப்பு எதிரொலி: அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் அழிப்பு பேரூராட்சி ஊழியர்கள் நடவடிக்கை


தேர்தல் அறிவிப்பு எதிரொலி: அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் அழிப்பு பேரூராட்சி ஊழியர்கள் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 March 2019 4:15 AM IST (Updated: 12 March 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக கறம்பக்குடியில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை பேரூராட்சி ஊழியர்கள் அழித்தனர்.

கறம்பக்குடி,

நாட்டின் 17-வது நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். இதையொட்டி நாடு முழுவதும் நேற்று முன்தினம் மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அரசு கார்கள், கட்டிடங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் போன்றவற்றை அனுமதியின்றி அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்த கூடாது. இதனால் கறம்பக்குடி பகுதியில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் அனுமதியின்றி எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.

மேலும் தாலுகா அலுவலகம், காந்தி பூங்கா, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இதேபோல் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்பட கட்சிகளின் விளம்பர பதாகைகளையும் ஊழியர்கள் அகற்றினர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கறம்பக்குடி, மழையூர், ரெகுநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story