தஞ்சையில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிப்பு பேனர்களும் அகற்றப்பட்டன


தஞ்சையில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிப்பு பேனர்களும் அகற்றப்பட்டன
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 8:45 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து தஞ்சையில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. மேலும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த பேனர்களும் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர்,

நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டன. தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினரால் எழுதப்பட்டு இருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தொடங்கியது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் தஞ்சை மேம்பாலம், மோத்திரப்பசாவடி மேம்பாலம், நாகை சாலையில் உள்ள மேம்பாலங்களில் அரசியல் கட்சியினர் வரைந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. 30-க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் இந்த சுவர் விளம்பரங்களை சுண்ணாம்பு கொண்டு அழித்தனர்.

இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எழுதப்பட்டு இருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்களையும் அகற்றினர். மேலும் பல்வேறு இடங்களில் அரசு சுவர்களில் எழுதப்பட்டு இருந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

Next Story