நாமக்கல்லில் வாக்காளர் விழிப்புணர்வு மனிதசங்கிலி கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடந்தது


நாமக்கல்லில் வாக்காளர் விழிப்புணர்வு மனிதசங்கிலி கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 9:48 PM GMT)

நாமக்கல்லில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

நாமக்கல்,

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வசதிகள் செய்து வருகிறது. அதன்படி 18 வயது நிரம்பியவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்வதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாக்காளர்கள், வாக்காளராக பதிவு செய்ய தேவையான தகவல்கள் மற்றும் தாங்கள் எந்த வாக்குசாவடிகளில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரத்தை தங்களின் பெயர் மற்றும் தந்தையின் பெயரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவின் இலவச தொடர்பு எண் 1950-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்து, அறிந்துக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல், இதே விவரங்களை ஸ்மார்ட் போனில் ‘வோட்டர் ஹெல்ப் லைன்’ என்ற செயலியின் மூலம் எளிதில் தெரிந்துகொள்ளும் வசதியும் தேர்தல் ஆணையம் செய்து தந்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களையும் தேர்தல் நாளன்று வாக்களிக்க செய்ய கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதுதவிர பொதுமக்களை கவரும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன வசதிகளுடன் கூடிய மின்னணுதிரை வாகனத்தின் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என 250-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story