திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 14 March 2019 4:42 AM IST (Updated: 14 March 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

சேத்துப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள ஊத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் காயத்திரி (வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து இருந்தார். காயத்திரிக்கும், சின்னசந்தவாசல் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ராஜேஷ் (25) என்பவருக்கும் கடந்த 10-ந் தேதி திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் காயத்திரி வீட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் மணமகன் வீட்டில் இருந்து 5 பேர் ராஜமாணிக்கம் வீட்டுக்கு ராஜேசையும், காயத்திரியையும் அழைத்து செல்ல வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த காயத்திரி குளித்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றவர். வீட்டில் இருந்த மாட்டு கொட்டகைக்கு சென்று மாடு கட்டும் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதைகண்ட உறவினர்கள் காயத்திரியை மீட்டு சிகிச்சைக்காக தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், காயத்திரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட காயத்திரிக்கு திருமணமாகி 4 நாட்களே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story