திருவண்ணாமலையில் ஊடக சான்றிதழ், கண்காணிப்பு குழுக்கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


திருவண்ணாமலையில் ஊடக சான்றிதழ், கண்காணிப்பு குழுக்கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 13 March 2019 11:35 PM GMT (Updated: 13 March 2019 11:35 PM GMT)

திருவண்ணாமலையில் ஊடக சான்றிதழ், கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான அனைத்து விளம்பரங்கள் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், திரையரங்குகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் வெளியிடுவதற்கு கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவினரிடம் முன் அனுமதி பெற்று வெளியிடப்பட வேண்டும். விளம்பரங்கள் முன் அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவம் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அமைந்துள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வழங்கப்படும்.

தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்களின் மாதிரிகள், தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள் மற்றும் திரையரங்குகளில் வெளியிடப்படும் குறும்படங்கள் மற்றும் ஸ்க்ரோலிங் வாசகங்களின் மாதிரிகள் ஆகியவற்றுடன் இணைத்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விளம்பரங்கள் வெளியிடப்படும் 48 மணி நேரத்திற்கு முன்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் விளம்பரங்கள் வெளியிடும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், திரையரங்குகள் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட விளம்பரத்திற்கான கட்டணத் தொகை, எத்தனை முறை மற்றும் நாட்கள் வெளியிடப்படுகிறது ஆகிய விவரங்கள் குறித்த கடிதத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விளம்பரங்களில் சாதி, மதம், சமுதாயம் தொடர்பான வாசகங்கள், படங்கள் மற்றும் வீடியோவிலும் இடம் பெறக்கூடாது. விளம்பரங்களுக்கான அனுமதி வழங்குவதும், நிராகரிப்பதும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி இல்லாமல் வெளியிடப்படும் அனைத்து விதமான விளம்பரங்களுக்கும், தொடர்புடைய அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அதனை வெளியிடும் ஊடகங்கள், திரையரங்குகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரையரங்குகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்கள் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி உத்தரவு இருந்தால் மட்டும் தான் வெளியிட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் தேர்தல் ஆணையத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை சீரான இடைவேளையில் ஒளிபரப்பு செய்திட வேண்டும். வாக்காளர் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுபாட்டு அறையினை கலெக்டர் திறந்து வைத்தார். வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தேர்தல் கட்டுபாட்டு அறைக்கு 180042536989 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செயல்படும் ஊடக மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story