தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் மதுபான கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் அதிகாரி எச்சரிக்கை


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் மதுபான கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 March 2019 10:30 PM GMT (Updated: 14 March 2019 11:17 PM GMT)

தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறும் மதுபான கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருக்கனூர் போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

திருக்கனூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருக்கனூர் போலீஸ் நிலையம் மற்றும் காட்டேரிக்குப்பம் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட மதுபான கடை உரிமையாளர்கள் மற்றும் போலீசார் இடையேயான ஆலோசனை கூட்டம் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, முருகானந்தம், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மதுபான கடை உரிமையாளர்கள் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும். புதுச்சேரி அரசின் கலால்துறை நிர்ணயித்துள்ள அளவினை மீறி மதுபானங்களை பொதுமக்களுக்கு விற்கக்கூடாது.

மதுபானங்களை பதுக்கி வைக்கும் நோக்கத்துடன் அதிக அளவில் மதுபானங்கள் வேண்டும் என யாராவது கேட்டால் உடனடியாக அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கவேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் அரசு அறிவுறுத்தலை மீறி அதிக அளவில் மதுபானங்களை விற்பனை செய்தால் மதுபான கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மதுபான கடைகளில் சி.சி.டி.வி.கேமராக்கள் சரியான முறையில் செயல்படுகிறதா? என கவனித்து அவற்றை பராமரிக்க வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவில் பணத்தினை எடுத்துச் செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மதுபான கடை உரிமையாளர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அரசு கலால்துறை அலுவலகத்தில் கள் மற்றும் சாராயக்கடை குத்தகைதாரர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலால்துறை ஆணையர் அசோக் குமார் தலைமை தாங்கினார். துணை ஆணையர் தயாளன், தாசில்தார் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுள்ளது. எனவே கள் மற்றும் சாராயக்கடை குத்தகைதாரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டு அவற்றை பின்பற்ற வேண்டுமென கலால்துறை அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

இந்த கூட்டத்தில் கலால்துறை அதிகாரிகள் மற்றும் கள், சாராயக்கடை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story