மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்கக்கோரி திண்டுக்கல் ரெயில் நிலையம் முற்றுகை


மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்கக்கோரி திண்டுக்கல் ரெயில் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 15 March 2019 11:00 PM GMT (Updated: 15 March 2019 9:57 PM GMT)

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்கக்கோரி திண்டுக்கல் ரெயில் நிலையத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், இந்த கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல்லில் ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி மேற்பார்வையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை முதலே 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் ரெயில் நிலையம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. பயணிகள் அல்லாதவர்களிடம் உரிய விசாரணை நடத்திய பின்னரே ரெயில் நிலையத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். மேலும் ரெயில் நிலைய தண்டவாள பகுதிக்கு சந்தேகப்படும்படி யாரேனும் செல்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர்.

இந்த நிலையில் காலை 11.30 மணிக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சங்கிலி தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து ரெயில் நிலையத்தை அக்கட்சியினர் முற்றுகையிட்டனர். பின்னர் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அதைத்தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் ஆனந்தன் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story