பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விவசாயிகள், பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விவசாயிகள், பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2019 3:31 AM IST (Updated: 16 March 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருச்சியில் விவசாயிகள், பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சி,

சமூக வலைதளங்கள் மூலம் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களிடம் நட்பாக பழகி, பின்னர் அவர்களை ஓரிடத்திற்கு வரச்செய்து பலாத்காரம் செய்து ஆபாசமாக வீடியோ எடுத்த பொள்ளாச்சி குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்கள் மீதான இந்த பாலியல் வன்முறை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம்(கட்சி சார்பற்றது) மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி கண்ணன் முன்னிலை வகித்தார்.

இதில் சமூகநீதி பேரவையை சேர்ந்த ரவிகுமார், மக்கள் பாதுகாப்பு மைய வக்கீல் கென்னடி, தமிழ்தேசிய பேரியக்க நிர்வாகி கவித்துவன், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த செழியன், ராஜா, மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி ஜீவா, பெண்கள் முன்னேற்ற இயக்க நிர்வாகி அருள் ஆக்னஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மாயமான சமூக ஆர்வலர் முகிலனை போலீசார் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் பின்னணியில் எந்த அரசியல் கட்சியினர் இருந்தாலும் அவர்களையும் போலீசார் கைது செய்திட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் சிலர் கருப்பு கொடியுடன் பங்கேற்றனர்.

இதேபோல, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன்பு நேற்று காலை தமிழ்நாடு முற்போக்கு பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு சங்கத்தின் தலைவி டி.பானுமதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விஜயலட்சுமி, பிரியா, பாரதி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, பாலியல் வன்கொடுமையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண் வக்கீல்கள் கோஷமிட்டனர்.

அப்போது வக்கீல் சங்க தலைவி பானுமதி கூறியதாவது:-
பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க தேவையில்லை. ஏனென்றால், அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அமைப்பு. எனவே, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் புகார் பெறுதல், சாட்சிகள் விசாரணை, ஆவணங்களை கைப்பற்றுதல் குற்றவாளியின் பெயர் விவரங்கள் தவிர, ஏனைய விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

புலன் விசாரணைக்குழுவில் திறமையான பெண் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பாலியல் வன்கொடுமை காட்சிகள், ஆபாச வீடியோக்கள் வெளியாவதை தடை செய்ய வேண்டும். இச்சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story