வாணியம்பாடியில் பரபரப்பு தொழில் அதிபரை நிர்வாணப்படுத்தி ரூ.3 லட்சம் பறிப்பு பெண் உள்பட 10 பேருக்கு வலைவீச்சு


வாணியம்பாடியில் பரபரப்பு தொழில் அதிபரை நிர்வாணப்படுத்தி ரூ.3 லட்சம் பறிப்பு பெண் உள்பட 10 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 March 2019 10:45 PM GMT (Updated: 17 March 2019 3:22 PM GMT)

வாணியம்பாடியில் தொழில் அதிபரை நிர்வாணப்படுத்தி ரூ.3 லட்சம் பறித்த பெண் உள்பட 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி, 

ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்ஹப்ஹாரீப் (வயது 45), தொழில் அதிபர். இவர், வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு வருட காலமாக எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் வீட்டில் வைத்து அவருக்கு சிகிச்சை பார்த்து வருகிறேன் வீட்டிலேயே மருத்துவம் செய்ய செவிலியர் தேவைப்பட்டது. இதற்காக எனக்கு தெரிந்த நபர்கள் மற்றும் உறவினர்களிடமும் கேட்டறிந்தேன். அதன்பேரில் வாணியம்பாடியை சேர்ந்த ஆவிதா என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களுக்காக செவிலியர் ஒருவரை ஏற்பாடு செய்துள்ளேன் என்று கூறினார்.

நேற்று முன்தினம் நான் பெங்களூருவில் இருந்து ஆம்பூருக்கு ரெயிலில் வந்தபோது மீண்டும் அந்த பெண் எனக்கு போன் செய்து நீங்கள் இன்றே வாணியம்பாடிக்கு வந்து செவிலியரிடம் பேசி அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். அதை நம்பிய நான் வாணியம்பாடியில் ரெயிலில் இருந்து மாலை 5 மணிக்கு வந்து இறங்கி, ஆவிதாவிற்கு போன் செய்து விலாசம் கூறும்படி கேட்டேன். அதற்கு “அங்குள்ள ஆட்டோக்காரரிடம் போனை கொடுங்கள் நான் விலாசம் கூறுகின்றேன்” என்று கூறினார். அதன் பின்னர் ஆட்டோவில் ஏறி அந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

என்னிடம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அங்கு இருந்தவர்கள் என்னை தாக்கி, எனது ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தினர். பின்னர் அந்த பெண் அருகே நிற்க வைத்து போட்டோ எடுத்தனர். இதனையடுத்து என்னிடம் கத்தியைகாட்டி மிரட்டி ரூ.10 லட்சம் கேட்டனர். தரவில்லை எனில் இந்த போட்டோவை போலீசிடம் காட்டி பெண்ணை கடத்திவிட்டதாக புகார் கொடுப்போம் என மிரட்டினர்.

அதைத் தொடர்ந்து என்னிடம் இருந்த 5 ஏ.டி.எம். கார்டுகளையும் கையில் இருந்த ரூ.4 ஆயிரத்தையும் பறித்துக் கொண்டு ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை சொல் என கூறி கத்தியை காட்டி மிரட்டினர். நான் ஏ.டி.எம்.கார்டு ரகசிய எண்ணை அவர்களிடம் கூறினேன். இரவு 9.30 மணி வரை அறையில் வைத்து பூட்டி விட்டனர்.

அதன் பின்னர் ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை என்னிடம் கொடுத்து ஒருவர் மூலம் மோட்டார் சைக்கிளில் பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கல்மண்டபம் என்ற இடத்தில் இருந்து காதர்பேட்டை வரும் வழியில் ‘என்னை காப்பாற்றுங்கள்’ என நான் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து என்னை காப்பாற்றினர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நான் அதன் பின்னர் எனது ஏ.டி.எம். கார்டுகளை எடுத்துச் சென்று பணம் உள்ளதா? என்று சோதித்து பார்த்த போது சி.எல்.ரோட்டில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நகையை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தி உள்ளனர்.

மேலும் ரொக்கமாக ரூ.1 லட்சத்தையும் எடுத்து உள்ளனர். எனவே என்னை மிரட்டி பணம் பறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஏஜயாஸ் என்பது தெரியவந்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஏஜயாஸ் அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக உள்ள ஆவிதா உள்பட 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story