வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 7:30 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்க இருப்பதால், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது.

கரூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி சுவர் விளம்பரங்கள் அழிப்பு, பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்கள், விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வரும் வேளையில், அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தநிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். இதையொட்டி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேட்புமனுதாக்கல் செய்யும் அறை, ஊடக கண்காணிப்புக்குழு அறை, தேர்தல் பிரிவு அலுவலகம் என தனித்தனியாக தேர்தலுக்காக தொடங்கப்பட்ட அறைகளுக்கு வேட்பாளர்கள் எளிதில் செல்லும் வகையில் ஆங்காங்கே தகவல் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு வருபவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு 100 மீட்டருக்கு முன்னதாகவே தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்றாற் வகையில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே, வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கலெக்டர் அலுவலக கூட்டரங்க நுழைவு வாயில் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கலெக்டர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் கட்சிரீதியான விளம்பரங்கள் உள்ளிட்டவை செய்யப்பட்டு இருக்கின்றனவா? என அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள, தாந்தோன்றிமலை மாவட்ட விளையாட்டு அரங்கின் நுழைவு வாயில் அலங்கார வளைவில், ஒருவரது பெயரை குறிப்பிட்டு அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது என தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, தெருவிளக்குகளை பழுதுபார்க்ககூடிய நகராட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் 2 பணியாளர்கள் நுழைவு வாயில் பகுதியை துணியை வைத்து மூடி அந்த தகவல்களை மறைத்தனர்.

வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஒரு வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கலுக்கான கட்டணம் ரூ.25 ஆயிரம் ஆகும். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு வேட்புமனுத் தாக்கலுக்கான கட்டணம் ரூ.12,500 ஆகும் என தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது தெரிவித்தார். வேட்பு மனுதாக்கல் தொடங்க இருப்பதால், கரூர் தொகுதியில் பிரதான கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பு விவரங்களை கணக்கீடு செய்வது உள்ளிட்ட பணிகளில் ஆயத்தமாகி வருகின்றனர்.

Next Story